சிங்கை தமிழ்க் கல்வி வளர்ச்சி மத்தியக் குழு அறிக்கைதமிழன்பர்களே!
1946 ஆம் ஆண்டு பாரதிதாசன் பிறந்த தின விழாக் குழுவினர்களிடமிருந்த மீதத் தொகை இரு நூறு வெள்ளியைப் பற்றி ஆலோசிப்பதற்காக 18.5.46 இல் கூடிய பொதுக் கூட்டத்தில் தமிழ்க் கல்வி வளர்ச்சிக் கென உபயோகப்படுத்த வேண்டுமென்ற அனைவரின் ஏகோபித்த முடிவின் படி சி.த.க.வ.ம. குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவானது தொழிற்சங்கங்களால் தோற்றுவிக்கப்பட்ட சகல தமிழ்ப்பள்ளிகளை ஒன்று சேர்த்து அந்தந்த கல்விக் குழுவின் தலைவர்களை மத்தியக் குழுவில் அங்கம் பெறச் செய்து, தாய்மொழியாகிய தமிழ் மொழி வளர்ச்சியே தனது குறிக்கோளாகக் கொண்டு தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்க் கல்வியைப் புகட்டி தமிழ்ப் பணியாற்றி வருகின்றது.
இக்குழுவின் சார்பாக தமிழ்க் கல்வி வளர்ச்சிக் கேற்ற காரியங்களை அவ்வப்போது கவனிப்பதற்காக மத்தியசெயற்குழு ஒன்றும் அமைக்கப்பட்டு தமிழ்மொழி வளர்ச்சிக்குரிய திட்டங்களின் படி சகல தமிழ்ப்பள்ளிகளையும் மேற்பார்வை யிட்டுக் கண்காணித்தல் ஆசிரியர்கள், மாணவ மாணவிகளது கல்வி வளர்ச்சிக்கான பாடத் திட்டங்கள் முதலியவையளித்தல், மாணவர்களுக்கு இலவசமாக பாடப் புத்தகங்கள் மற்றும் கல்விக்கான உப கருவிககள் வழங்குதல், ஆசிரியர் கழகம் ஆசிரியர் போதனா முறை வகுப்பு, மாணவர் கழகம் இவைகளமைத்து அறிவு, ஆற்றலுக்கான ஆக்க வேலைகளைச் செய்தல், தமிழ்க் கல்வி அபிவிருத்திக் குரிய அலுவல்களை நிறைவேற்றுவதற்கு, பொது மக்களிடமிருந்து உதவி நிதி திரட்டி மேற்காணும் தமிழ்த் தொண்டு புரிந்து வந்திருக்கின்றது.
மத்தியக் குழுவின் அலுவலர்கள்:
தலைவர் : மு.ரா. குருதேவன்
துணைத்தலைவர் : எம். ஆர். சுப்பையா
செயலாளர் : எஸ்.எம். ராஜகோபால்
துணை செயலாளர் : ம.சி. திருநாவுக்கரசு
பொருளாளர் : வெ. சுப்பையா
கணக்கர் : வீ. கலியாணசுந்தரம்
செயற்குழுவினர்கள் : ச.சா. சின்னப்பனார்
கோ. இராமலிங்கம்
பொ.வெ. வீரமணி
ந. நக்கீரன்
வீ. பொன்னுசாமி
கூட்டங்கள்
மேற்குறிப்பிட்ட காலத்திற்குள் இரண்டு பொதுக் கூட்டங்கள், ஒரு கலைச்சொல்லாக்கக் கண்டனக் கூட்டம், ஒரு தமிழ் கலாசாலை அமைப்பு ஆலோசனைக் கூட்டம், ஐந்து மத்தியக குழுக் கூட்டங்கள், 11 செயற்குழுக் கூட்டங்கள், ஒரு அவசரக் கூட்டம், ஆசிரிய் கழக அமைப்புக் கூட்டம், மாணவர் கழக அமைப்புக் கூட்டம் ஆகிய கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
மேற்பார்வையாளர்
பெரியார் ச.சா. சின்னப்பனார் அவர்கள் சகல தமிழ்ப்பள்ளிகளின் மேற் பார்வை யாளராக நியமனம் பெற்று அரசாங்க கல்வி இலாகாவின் அங்கீகாரத்தையும் கொண்டு மத்தியக் குழுவின் நிதியிலிருந்து சிறிது ஊதியம் பெற்று மத்தியக் குழுவின் மேற்பார்வையிலுள்ள பள்ளிகளைக் கண்காணித்தும் , மத்தியக் குழுவுடன் இணைப்பதற்கும் தமிழ்மொழி வளர்ச்சியுறுவதற்குரிய அரும்பெரும் சேவைகளைச் செய்து வருகிறார் என்பதையும் அறிவித்துக் கொள்கிறோம்.
பொருளாதார நிலைமை
தமிழ் மொழிக்கான பல காரியங்களை நிறைவேற்றுவதற்கு மத்தியக் குழு பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப் பட்டிருந்தமையால் தீபாவளி, தைப்பூசம் மற்றும் இதர விழாக்களிலும் ஏனைய பொதுக் கூட்டங்களிலும் மாணவ, மாணவிகளைக் கொண்டு பூ விற்பனை செய்து மத்தியக் குழுவிற்குப் பொருள் திரட்டப் பட்டது.
பள்ளிக் கூடங்கள்
மத்தியக் குழுவின் மேற்பார்வையில் நடைபெற்று வரும் 30 பள்ளிக் கூடங்களில் பயின்றுவரும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக புத்தகங்கள் , உப பாடப்புத்தகங்கள், நோட் புத்தகங்கள், எழுதுகோல் ஏனைய கல்விக்குரிய உப கரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மேற்காணும் பள்ளிகளில் மத்தியக் குழுவின் முயற்சியால் 7 பள்ளிக் கூடங்கள் அரசாங்கக் கல்வி இலாக்காவால் பதிவாக்கப்பட்டிருக்கின்றன. ஏனைய பள்ளிக் கூடங்கள் சுகாதார அமைப்புமுறை சீராக்கப்பட்டதும் கூடிய விரைவில் பதிவாக்கப்படுமென்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அன்றியும் மத்தியக் குழுவின் மேற்பார்வையில் நடைபெற்று வரும் இரவு பாடசாலை களில் பயின்று வருபவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
சிங்கப்பூர் தமிழ்க் கல்வி வளர்ச்சி மத்தியக் குழுவின் மேற்பார்வையிலுள்ள மொத்த தமிழ்ப் பள்ளிக் கூடங்கள்:
பெரியார் ஈ.வெ.ரா. சமதர்ம தமிழ்ப் பாடசாலை 1 26 17 43
வாசுகி தமிழ்ப் பாடசாலை 1 28 18 46
வள்ளுவர் பாடசாலை (பதிவுற்றது) 2 38 32 70
தாலமுத்து பாடசாலை (பதிவுற்றது) 1 17 23 40
பாரதிதாசன் பாடசாலை (பதிவுற்றது) 2 56 26 82
மறைமலையடிகள் பாடசாலை 1 15 13 28
சிங்கார வேலனார் பாடசாலை 2 39 34 73
தங்கமணி பாடசாலை 2 44 48 92
அரவிந்தர் பாட சாலை (பதிவுற்றது) 2 44 33 77
பகவத்சிங் பாடசாலை 1 19 24 43
கலைமகள் பாடசாலை (பதிவுற்றது) 2 29 39 68
அருணா பாடசாலை 1 22 12 34
ஈ.வெ.ரா. தமிழ்பாடசாலை
(அ) ஏர்பேஸ் 2 81 47 128
(ஆ) 1 26 23 49
ஜீவானந்தம் பாடசாலை (பதிவுற்றது) 1 30 23 53
காளமேகம் பாடசாலை 1 17 9 26
நீலாம்பிகை பாடசாலை 3 95 73 168
நாகம்மையார் பாடசாலை 1 24 12 36
மோகன் குமாரமங்கலம்
பாடசாலை (பதிவுற்றது) 1 16 15 31
கண்ணம்மாள் பாடசாலை 1 12 10 22
சிதம்பரனார் பாட சாலை 1 26 17 43
சுகந்திரோதயம் பாடசாலை 1 12 19 31
மங்கம்மாள் பாடசாலை 1 16 13 29
புகழேந்தியார் பாடசாலை 1 16 11 27
உமார்ப்புலவர் பாடசாலை 1 34 23 57
மறுமலர்ச்சி பாடசாலை 1 11 13 24
கம்பர் பாடசாலை 1 30 32 62
இராமமூர்த்தி பாடசாலை 1 29 13 42
பாரதியார் பாடசாலை 1 12 13 25
பன்னீர்செல்வம் பாடசாலை 1 12 9 21
மொத்தம் 39 876 694 1570
மாணவர் மகாநாடு
மத்தியக் குழுவின் முயற்சியாலும் சகல கிளைக் கல்விக்குழுவினர்களின் ஒத்துழைப்போடும் தொழிற்சங்கங்களின் ஆதரவுடனும் மலாயாவிலேயே என்றுமே கண்டிராத (முதல் மாணவர் மகாநாடு) வகையில் தமிழ் மாணவர்களால் தைத் திங்கள் ஏழாம் நாள் (19.1.1947 இல்) தொழிற் சங்க சம்மேளனத்தில் திரு. மெ. சிதம்பரம் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேலும் ஒவ்வொரு ஆண்டிலும் தைத் திங்கள் முதலாம் நாளன்று மாணவர் மகாநாடு நடத்தப்பட வேண்டுமென்ற தீர்மானித்ததற்கிணங்க இவ்வாண்டிலும் இரண்டாவது மாணவர் மகாநாட்டை நடத்துவதற்கு சகல ஒத்துழைப்பும் நல்குவீர்களென்று நம்புகிறோம்.
மாணவர் கழகம்
சகல பள்ளி மாணவ மாணவிகளைக் கொண்டு 9.3.1947 இல் சிங்கை தமிழ் மாணவர் கழகம் நிறுவப்பட்டு, அக் கழகத்தின் மூலம் அற நெறிகளும், பேச்சுப் பயிற்சி, பாட்டுப் பயிற்சி முதலியவைகளும் அறிவு வளர்ச்சிக்கான போதனைகளும் நடத்தப்பட்டு வருவதோடு, தமிழ்ப் பாடல்களில் தேர்ச்சி யடைந்துள்ள மாணவ மாணவிகளுக்கு சிங்கப்பூர் வானொலி வாயிலாக பயிற்சியளிக்கப்பட்டும் வருகின்றன.
ஆசிரியர் கழகம்
சகல பள்ளி தமிழ் ஆசிரியர்களைக் கொண்ட சி.த. ஆசிரியர் கழகம் 23.4.47 அமைத்து அக்கழகத்தின் மூலம் அறிவுக்குப் பொருத்தமற்ற பாடங்களையகற்றி, பகுத்தறிவு வளர்ச்சிக்குரிய பாடங்களைத் தயாரித்து மாணவர்களுக்குப் போதித்தும், மத்தியக்குழுவின் முயற்சியிலும், அரசாங்க கல்வி இலாக்காவின் ஆதரவி லும் மேற்படி கல்வி இலாக்கா பரிசோதகர் திரு. ஜே.பி. அப்பாதுரை அவர்களின் மேற்பார்வையில் ஆசிரியர்களின் போதனா முறை வகுப்பும் 1.10.47 இலிருந்து நடைபெற்று வருகின்றது.
எதிர்கால வேலைத் திட்டங்கள்
மத்தியக் குழுவுடன் இணைக்கப்பட்ட சகல பள்ளி, மாணவ, மாணவிகளுக்கும் ஒரே மாதிரியான உடைகள், சின்னங்கள் (பேட்ஜ்கள்) அளித்தல், தமிழ் மாணவ மலர் என்ற மாத வெளியீட்டின் மூலம் மாணவர்கள் முன்னேற்றத்திற்கான கல்வி முறைகளை உணர்த்துதல் பள்ளிகள் அமையாத இடங்களில் பள்ளிகளமைத்தல், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உடை வசதியோடு தமிழ்க் கல்வியைப் புகட்டுதல், மாணவ மாணவிகளுக்கு உயர்தரக் கல்வியை அளிக்கக் கூடிய வசதிகளைச் செய்தல், ஆசிரியர்களுக்கு போதனா முறைப் புத்தகங்கள் இலவசமாக விநியோகித்தல் ஆகிய வேலைகளைத் துரிதமாகச் செய்வதற்கு தமிழபிமானிகளையும் மத்தியக் குழுவில் அங்கம் பெறச் செய்து, அவர்களின் ஆதரவோடு நடைமுறையில் கொண்டுவரலாமென எதிர்பார்க்கிறோம்.
வேண்டுகோள்
தமிழபிமானிகளே!
சி.த.க.வ.ம.குழு, குறுகிய காலத்திற்குள் தாய்மொழியை ஆரம்பக் கல்வியாக தமிழ்க் குழந்தைகளுக்குப் புகட்டி தமிழ்ப்பற்றும், தமிழ் உணர்ச்சியும் ஊட்டியதன் வாயிலாக இன்று தமிழர் சமுதாயத்தில் ஒரு வித புத்துணர்ச்சி உண்டாகி, வருங்காலத்தில் தமிழர்கள் தலைசிறந்து விளங்குவதற்குரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு மென்மேலும் தமிழ்க் குழந்தைகளின் கல்வி அறிவு வளர்ச்சி பெறுவதற்கும், தமிழ்க் கலை தழைத்தோங்குவதற்கும் தமிழ் சமுதாய மேம்பாட்டிற்கும் எதிர்கால வேலைத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்று வதற்கும் தமிழ்ப் பெருமக்கள் தங்கள் கடமையை உணர்ந்து தங்களாலியன்ற தகுந்த ஒத்துழைப்பும் பொருளுதவியும் அளிக்குமாறு வணக்கத்துடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி செலுத்துதல்
மத்திய குழுவுடன் சகல காரியங்களிலும் பங்கு பெற்று பூரண ஒத்துழைப்பளித்த கிளைக் கல்விக் குழுவினர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் தொழிற்சங்கத்தார்களுக்கும், சிங்கை திராவிட கழகத்தார்களுக்கும், மத்திய குழுவிற்கு எவ்வித வாடகையுமின்றி இடவசதியளித்த சிங்கை தமிழ் நூல் நிலையத் தார்கட்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.
தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கு அவ்வப்போது நிதியளித்துள்ள பொது மக்களுக்கும் தனித்த முறையில் நன்கொடை வழங்கியுள்ள தமிழ் அபிமானிகளுக்கும் முதல் மாணவர் மகாநாட்டின் போவர இடவசதியளித்த தொழிற்சங்க சம்மேளனத்தார் களுக்கும் குறிப்பிட்ட இரண்டு தமிழ்ப் பள்ளிக் கட்டடங்களை சீர்ப்படுத்துவதற்குப் பொறுப்பேற்றுக் கொண்ட தமிழ் அபிமானிகளான திரு.எம்.கே. சிதம்பரம், கோ. சாரங்கபாணி ஆகியவர்களுக்கும் எங்களது உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.மத்தியக் குழுவின் நிகழ்ச்சிகளை அவ்வப்போது பத்திரிகைகளில் பிரசுரித்துதவி புரிந்த தமிழ் முரசு மலாயா நண்பன் ஏனைய உள்ளூர், வெளியூர் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் எங்களது உளமிக்க நன்றி உரித்தாகுக.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்க் கலை!!
இங்ஙனம்
சி.த.க.வ.ம. குழுவின் சார்பாக தங்களன்பன்
எஸ்.எம்.இராஜகோபால்
செயலாளர்
சிங்கப்பூர்
28.12.1947
No comments:
Post a Comment