Sunday, December 26, 2010

உ.ராமசாமி நாடாருக்கு விருந்து

உ.ராமசாமி நாடாருக்கு விருந்து
குடியரசு 8.10.1940)

பல அன்பர்கள் உபசாரம்
சமீபத்தில் காலனி அரசாங்கத்தாரால் சமாதான நீதிபதி பட்டம் வழங்கப்பட்ட சிங்கப்பூர் தமிழ்ப் பிரமுகர் தோழர் உ. ராமசாமி நாடார் அவர்களுக்கு சிங்கப்பூர் தமிழ் சமூகத்தினர் 5.9.40 வியாழக்கிழமை மாலை 6 மணிக்க அடல்பி ஹோட்டலில் ஒரு தேநீர் விருந்துபசரிப்பு நடத்தி உபசாரப் பத்திரம் வாசித்தளித்தனர்.

இவ்விருந்துபசரிப்பிற்கு காலனி ஆக்டிங் கலோனியல் செக்ரட்டரி, ஆக்டிங் சீப் ஜஸ்டிஸ், இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலிஸ், முனிசிபல் தலைவர் உள்ளிட்ட அரசாங்க இலாகாக்களின் தலைவர்குளம், முக்கியஸ்தர்களும், நகரப் பிரமுகர்களான ஐரோப்பியர், சீனர், இந்தியர், மலாயக்காரர், அரபிக்காரர் முதலானவர்களும் ஆண்களும் பெண்களுமாய் ஏறக்குறைய 400 பேர்கள் விஜயம் செய்திருந்தனர்.

தேநீர் அருந்திய பின்னர் ஆக்டிங் கலோனியல் செக்ரட்டரி மிஸ்டர் வீஸ்பர்க் அவர்களுக்கு தோழர் பா. கோவிந்தசாமி ஜே.பி. அவர்களாலும், தோழர் உ. ராமசாமி நாடார் அவர்களுக்கு தோழர் அ.சி.சுப்பையா அவர்களாலும் ஜரிகை மாலைகள் அணிவிக்கப்பட்டன. திருவாட்டி நாடார் அவர்களுக்கு மிஸ். லக்சியால் பூக்கூடை வழங்கப்பட்டது.

தோழர் ஈ.வி. டேவிஸ் அவர்கள் தோழர் உ. ராமசாமி நாடார் அவர்களை அறிமுகப் படுத்தி வைக்கும் போது பேசியதாவது:-
தமிழ்ச் சமூகத்தினர்களால் அதிகமாகப்போற்றப்படும் தமிழ் பிரமுகர் ஒருவர் சமாதான நீதிபதியாய் நியமிக்கப் பட்டது குறித்து கெளரவிப்பதற்காக அழைக்கப்பட்ட அழைப்பின் மீது நீங்கள் விஜயம் செய்திருக்கிறீர்கள். தோழர் உ. ராமசாமி நாடார் அவர்களை அவருடைய சமூகத்தாருக்கு அறிமுகப்படுத்தத் தேவையில்லை. அவர் இந் நகரத்தின் பழமையான குடும்பஸ்தர். நிதானமான வெற்றிகரமான வியாபார முயற்சியால் அவர் செழிப்பான ஒரு வர்த்தகத்தை ஸ்தாபித்துக் கொண்டவர். அவருடைய சமூகத்தினுள் அவர் ஒரு பெரிய வர்த்தகர். ரொம்ப அடக்கமும் ஒடுக்கமும் ஒதுங்கி நிற்கும் குணங்களும் வாய்க்கப் பெற்றவராய் அவர் இருந்தாலும் அவர் வர்த்தகத்துறையில் தலை சிறந்து விளங்குகிறார் என்பதற்காக மட்டில்லாது அவர் தம்முடைய சமூக நன்மைக்கான காரியங்களில் எப்போதும் தளர்வுறாத முயற்சி எடுத்துக் கொள்வதாலும் காலனி அரசாங்கம் யுத்தத்திற்காக பணம் திரட்டும் முயற்சியில் தீவிரமான பங்கெடுத்தும் தாமே காரியாம்சத்தில் நிரூபித்தும் தம் சமூகத்தினரிடையே அதிக எழுச்சியை உண்டு பண்ணியதாலும் அவர் வெகு கண்யமாக மதிக்கப்பட்டு வருகிறார். தாராளமாய் பணம் வழங்கம்படி தம் சமூக மக்களிடம் முதல் முதல் விண்ணப்பம் செய்து கொண்டவருள் இவரும் ஒருவர். ஒரு பெரிய நன்கொடையோடு கூடவே இந்த விண்ணப்பத்தை இவர் விடுத்தார். இதைத் தொடர்ந்து பல நன்கொடைகள் வருமென்று நான் நிச்சயமாய் கூறுவேன். யுத்த ஆரம்பந் தொட்டு பணந்திரட்டுவதில் இவர் கொஞ்சமும் அயராது வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்த யுத்த நிதிக்குத் தேவை இருக்குமளவும் இவ்வேலையை இவர் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார் (கை தட்டல்).

இந்த நேரத்தில் இம்மாதிரியான ஒரு உபசரிப்பை நடத்துவதற்கு ஒருக்கால் நான் நியாயங்கூற வேண்டியதாய் இருக்கலாம்.தற்போதைய சஞ்சலமான நிலைமையை உத்தேசித்து தோழர் நாடார் அவர்கள் தமது உதார குணங்களுக்கேற்ப தம்மை கெளரவிப்பதற்காக தமக்கு உபசாரம் நடத்த விரும்பியவர்களிடம் அந்த உபசரிப்புகளுக்குச் செலவாகக் கூடிய தொகைகளை யுத்த நிதிகளுக்கு வழங்கும்படிக் கோரினார். இவற்றுள் சிலவற்றை தமது வர்த்தகச் சாதுர்யப்படி ஒப்புக்கொண்டு, இந்த உபசரிப்புகளை யுத்த நிதிக்குப் பணந்திரட்டும் நற்காரியத்திற்கு வெற்றிகரமாய் பயன்படுத்திக் கொண்டார். இந்த நோக்கங் கொண்டே யுத்தநிதிக்கு பணந் தரும்படியும், அதுவும் தாராளமாய் வழங்க வேண்டியதை வற்புறுத்திக் காட்டவும் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தைப் பெறுவதற்காகவே இதையும் ஒருக்கால் ஒப்புக் கொண்டிருக்கலாம்.
நான் இப்போது நாடார் அவர்களுக்கு தமிழ்ச் சமூகத்தினர் வழங்கும் உபசாரப் பத்திரத்தை வாசிக்கிறேன். (இப்பத்திரம் கீழே தரப்படுகிறது)

தோழர் நாடார் அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டத்திற்கு உங்கள் சார்பில் நான் பாராட்டுகிறேன். இந்தக் கெளரவப் பட்டத்தின் உயரிய தன்மைகளை அவர் கண்யமாகப் பேணுவார் என்று நான் எடுத்துச் சொல்ல தேவையில்லை.
தோழர் உ.ராமசாமி நாடார் அவர்களுக்கு சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தினர் உவந்தளித்த உபசாரப் பத்திரம் :

அன்பீர்!
தாங்கள் சிங்கப்பூர் செட்டில் மெண்டிற்கு ஒரு சமாதான நீதிபதியாய் நியமனம் பெற்றமைக்கு எங்களது உள்ளன்பான உவப்பை இந்த உபசரிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்ள சந்தோசப்படுகிறோம்.
சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்து, சமூக நலன்களின் பொருட்டு தாங்கள் செய்து வரும் பல காரியங்களையும் பார்த்து இந்த தகுதிவாய்ந்த பட்டத்தை தங்களுக்கு வழங்கியதற்கும் எதிர்காலத்தில் தங்களுக்கு இன்னும் அதிக சந்தோசந் தரக்வடிய பட்டங்களுக்கு இது முதற்படியாக இருப்பதற்கும் அரசாங்கத்திற்கு இச் சந்தர்ப்பத்தில் எங்களது வந்தனங்களையும் தெரிவிதது கொள்கிறோம்.

மலாயா தேசபக்த நிதிக்கு பொருள் வழங்கிய இந்தியர் பட்டியலில் தாங்கள் முதலாவதாக நின்று வழிகாட்டியதும், அந்த நிதிக்கு சிங்கப்பூர் இந்தியர்களை யயல்லாம் தாராளமாய் பணம் வழங்கும்படி செய்ததும், அதற்கான ஏற்பாடுகளைச செய்வதற்கப் பெரும் பிரயாசை எடுத்துக் கொண்டதும், பிரிட்டிஷ் அரசாங்கத்தினிடம் தனக்குள்ள பாரம்பரிச ராஜ விசுவாசத் தன்மையை இந்திய சமூகம் நிலை நிறுத்திக் கொள்ள உதவின. மேலும் இதுவரை நம் சமூகத்திடை நடந்துள்ள யுத்த நிதி பண வசூலிப்பு மிகவும் சந்தோசகரமாய்க் காணப்படுவதிலும் தங்களுடைய தலைமை சிங்கப்பூர் இந்தியர்களிடை மட்டில்லாது மலாயா நாட்டு இந்தியர்களிடையே சந்தேகமற்ற தனிச்சிறப்பு பெற்றிலங்ககிறது.

தாங்கள் செய்து வரும் சமூகச் சேவையின் தன்மையும் தங்களுடைய எண்ணற்ற உதார ஈகையின் சிறப்பும் தங்களிடம் இன்னும் அதிகமாகவே நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கும்படித் தூண்டுகோல் செய்யும் அவ்வளவு அதிகப்பட்டதாயும் அவ்வளவு அடுத்தடுத்ததாயும் இருக்கின்றன. ஆதலால் தமிழ்ச்சமூகத்தின் நன்மைக்குரித்தானதாகவும் தங்களுடைய பெயர் விளங்கி ஒளிர ஒரு நிரந்தர நிலையத்திற்கேற்ற வகையில் ஒரு சன்மானத்தை தாங்கள் மகிழ்வோடு வழங்குவீர்கள் என நாங்கள் நம்ப இடமேற்படுகிறது.

மலாயா வாழும் இந்திய சமூகத்தில் முதன்மையாளராகவும், வழி கோலிகளாகவும் இருக்கும் தமிழ்ச்சமூகத்தின் முற்போக்கு தங்களுடைய மேலான தலைமையில் சுபீட்சமான எதிர்காலத்தை அடையக் கூடியதாய் இருப்பதோடு வட, இந்த நாட்டிற்குச் சம்பந்தபட்ட எல்லா காரியங்களிலும் தமிழ் சமூகம் அதிப்படியான பங்கிற்குத் தகுதியான வெற்றியை தனக்குத் தானாகவே அடையும்.

இதை எங்களுடைய அடக்கமான வெகுமானமாக சந்தோசமாய் வழங்குவதோடு தங்கள் மீதும், தங்கள் குடும்பத்தினர் மீதும் ஆண்டவன் இன்னம் அருள் கிருபைகளைப் பொழிய வேண்டுமெனவும் இறைஞ்சுகிறோம்.

ஆங்கிலத்திலிருந்த உபசாரப் பத்திரத்தை தோழர் ஈ.வி.டேவிஸ் அவர்களும் தமிழிலிருந்த உபசாரப் பத்திரத்தை தோழர் ஆத.கு.பள.மெ. மெய்யப்பச் செட்டியார் அவர்களும் வாசித்து வெள்ளிப் பேழையில் வைத்து தோழர் ஈ.வி.டேவிஸ் அவர்களால் தோழர் நாடார் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த உபசரிப்பிற்குப் பதிலளிக்கையில் தோழர் நாடார் அவர்கள் கூறியதாவது:-
யுத்த செய்திகளில் எல்லோரும் அதிக கவனம் செலுத்தும் இந்த சமயத்தில் எனக்குச் செய்த இந்த கெளரவத்திற்கு நான் மிகவும் நன்றியறிதல் உடையவனாய் இருக்கிறேன். உலக விடுதலைகாண இந்த யுத்தம், நீங்கள் எல்லோரும் அறிந்திருப்பது போல் இப்போது பிரிட்டிஷ் கால்வாயில் நடத்தப்பட்டு வருகிறது. ஹிட்லர் கொள்ளை ஒழியும் வரையில் இந்த யுத்தம் நடைபெறும். இந்த யுத்தத்தை வெல்வதுதான் இப்போதய முக்கிய பிரச்சனை. இவ் வெற்றி கைவரப் பெற்றால் மற்றெல்லா காரியங்களும் தானாகவே ஒரு நிலைப்பட்டு விடும். ஆதலால் எந்த சமூகம், எந்த மதம், எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாய் இருப்பினும் சி, ஆணாயினும், பெண்ணாயினும் சரி, இந்த யுத்தத்தை வெல்லக் கூடிய மகத்தான முயற்சிகளுக்கு அவசியமான அவசரத் தேவைகளை நன்றாய் உணர வேண்டியது நமது கடமை. திங்கட் கிழமை தினம் ஒலிபரப்பில் நமது மேன்மைதங்கிய கவர்னர் அவர்கள் பேசிய போது மலேயா வழங்கும் யுத்தக் கடன் நன்கொடையானது நாம் இந்த யுத்தத்தில் நமது உள்ளமும் உயிரும் ஒன்று சேர்ந்து உதவும் என்பதின் அடையாளம் என்று கூறியுள்ளார். உலக சமாதானத்தை இப்போது பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஹிட்லர் கொள்கையையும், நாஜி இயக்கத்தையும் ஆழப்புதைக்க மன்னர் பிரான் அரசாங்கத்திற்கு வேண்டிய உதவிகளை ஒரு வழியில் மட்டுந்தான் என்றில்லாது பல வழிகளிலும் மலேயா தனது பங்கைச் செய்யும் என்ற உறுதி எனக்கு உண்டு. எனது சமூகமான தமிழ்ச்சமூகம் உங்களுடன் தோளோடு தோள் நின்று தொண்டாற்ற ஒரு அணுவும் பின்னçடாது என நான் உறுதியாகவும் சொல்லக் கூடும். ஏனெனில் உதவி செய்வதே தமிழர் தத்துவம். (கை தட்டல்). நம் மன்னர் பிரான் அரசாங்கம் இந்த யுத்தத்தில் வெற்றி பெற மன மொழி மெய்யால் கடவுளை பிரார்த்திபபோமாக. இதோடு உங்கள் எல்லோருடைய அன்பிற்கும், அபிமானத்திற்கும் என் மனப்பூர்வமான வந்தனத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

விருந்தினர்களின் சார்பில் ஆக்டிங்கலோனியல் செக்ரெடிரி ஹானரபிள் மிஸ்டர் எச். வீஸ்பர்க் அவர்கள் பேசியதாவது:-
பட்டத்தை அங்கீகரித்து கெளரவிக்கும் இம்மாதிரியான உபசாரக் கூட்டங்களில் கலந்து கொள்ள சந்தோசப்படுகிறேன். தோழர் ராமசாமி நாடார் அவர்கள் முப்பது வருடமாய் இந்நாட்டில் வசிப்பவர். இந்தியர்களுள் ஒரு முக்கியஸ்தர்.
யுத்த நிதிக்கு பத்தாயிரம் வெள்ளி வழங்கி யிருக்கிறார். தென்னிந்தியர் பகுதியின் தலைவராய் இருந்து மலாயா தேச பக்த நிதிக்குப்பணம் வசூலித்துக் கொடுத்திருக்கிறார்.
இப்பொழுதும் யுத்த நிதிக்குப் பணம் வசூலித்துக் கொண்டிருக்கிறார். இந்தியர்களின் ராஜ விஸ்வாசத்தை இவை புலப்படுத்துகின்றன. மன்னர்பிரான் அராங்கம் வெற்றி பெறும் வரை யுத்தம் செய்வதற்கு உதவியாய் காலனி யுத்தக்கடன் பத்திரங்கள் ஏற்பட்டள்ளதை தாராளமாய் வாங்கி ஆதரிப்பது எல்லோருடைய கடமை.
இநதிய சமூகம் யுத்த நன்கொடைகளுக்கு தாராளமாய் வழங்கியிருப்பது போல் இந்த யுத்தக் கடனையும் ஆதரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தோழர் நாடார் அவர்கள் இன்னும் ஒரு ஆயிரம் வெள்ளி இப்போது யுத்த நிதிக்கு வழங்குகிறார். தோழர் நாடார் அவர்களுக்கும் உங்கள் எல்லோருக்கும் என் வந்தனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடைசியாய் ராஜ வாழ்த்து அடல்பி ஹோட்டல் பேண்டு வாத்தியக்காரர்களால் வாசிக்கப்பட்டு கூட்டம் கலைந்தது. விருந்தினர்கள் பலர்தோழர் நாடார வர்களுக்கு வாழ்த்து கூறிச் சென்றனர்.

No comments:

Post a Comment