திரு.அ.சி. சுப்பையா அவர்களின் சடலம் தகனம் செய்யப்பட்டது
சிங்கப்பூர் தமிழ்ப் பிரமுகர்களில் ஒருவரும், சமூக சீர்திருத்த சேவையாளரும், பல சங்கங்களை ஸ்தாபித்தவரும் மலாயாவில் பிரசித்திப் பெற்ற காந்தரசம் கம்பெனியின் சொந்தக்காரரும், அறிஞரும், நூலாசிரியருமான திரு. அ.சி. சுப்பய்யா அவர்களின் சடலம் நேற்று மாலை (15.10.55) பட்டாடாரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. திரு. சுப்பய்யா அவர்கள் சென்ற வியாழக்கிழமை நள்ளிரவிற்குப் பின் மயக்கமுற்றுப் படுத்தவர் பிரக்ஞை தெரியாமல் வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணிக்கு அமைதியாக உயிர் நீத்தார்கள். திரு. சுப்பய்யா அவர்கள் தம் மனைவியார் திருமதி. அஞ்சலையம்மாள் அவர்கள் மரணமுற்ற 21 ம் தினத்தில் இறந்து விட்டார்கள்.
நேற்று நடந்த தகனத்திற்கு நகரப் பிரமுகர்களும், உறவினர்களும், நண்பர்களும், ஐந்நூறுக்கு மேலாக வந்திருந்தனர். சுடுகாட்டிற்கு வந்து அஞ்சலி செய்வீர்களா என்று கேட்ட தாத்தாவிற்கு வாக்குறுதி அளித்திருந்த மகளும் பேத்திகளும், அவரின் குடும்பத்தினர்களும் தகனத்திற்கு வந்திருந்தனர்.
திரு. சுப்பய்யா அவர்களின் வாழ்க்கையின் சில குறிப்புகளைக் கூறி அப்பெரியாரின் ஆத்ம சாந்திக்கு இரு நிமிடங்கள் மெளனப் பிரார்த்தனை செய்யும்படி அவரின் குடும்பத்தினரின் சார்பில் திரு.கோ.சாரங்கபாணி அவர்கள் கேட்டுக் கொள்ள யாவரும் பிரார்த்தனை செய்து கொண்ட பின், தந்தையின் பிரேதத்திற்கு தனயன் தீயிட்டார்.
அநுதாபக் கூட்டம்
23.10.55 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு சிங்கப்பூர் ரேஸ்கோர்ஸ் லேனிலுள்ள காந்தி ஞாபகார்த்த மண்டபத்தில் 14.10.55 இல் சிங்கப்பூரில் காலமான திரு.அ.சி. சுப்பையா அவர்களுக்கு அநுதாபக் கூட்டம் நடைபெறும். அநுதாபிகள் அனைவரையும் கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்கிறோம்.
காரியதரிசி, தமிழர் சீர்திருத்தச் சங்கம்.
14.10.55 இல் மறைந்தார் அ.சி.சுப்பையா
மறைந்த பொதுநலப் பணியாளர்
அ.சி.சுப்பையாவுக்கு அநுதாபம்
அவரின் எண்ணங்களை நிறைவேற்றி வைக்க ! தலைவர் சாரங்கபாணி.
சுப்பையாவின் தன் முயற்சி பற்றிப் பலர் பேச்சு
மலாயாத் தமிழர்களிடையே சீர்திருத்த நற்பணி புரிந்த செம்மல் திரு.அ.சி. சுப்பையா அவர்களின் மறைவு குறித்து முந்தாநேற்று இங்குள்ள காந்தி நினைவு மண்டபத்தில் அநுதாபக் கூட்டம் நடத்தப்பட்டது.
தமிழர் சீர்திருத்தச் சங்க ஆதரவில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு திரு.கோ. சாரங்கபாணி அவர்கள் தலைமை வகித்தார்கள். திரு.அ.சி. சுப்பையா அவர்களின் மறைவு தமிழருக்கொரு பெரும் நஷ்டம் என்று வருந்திக் கூறினார்.
மலாயாவில் பல சங்கங்கள் உருவாகக் காரணமாக முன்னின்று உழைத்தும், உதவியும், தமிழர் சீர்திருத்தச் சங்கத்தை நிறுவியவருள் ஒருவராக இருந்ததோடு சங்கம் அமைந்ததுமே உப தலைவராகவும், நீண்ட காலத் தலைவராகவும், ஆலோசகராகப் பணியாற்றியும் ஈப்போவில் அகில மலாயா தமிழர் மகாநாடு கூட்ட முன்னிருந்து பாடுபட்டும் பொதுத்துறை பலவற்றில் பங்கு கொண்டார் என்றும், அவரின் காலஞ் சென்ற மனைவியாருடன்தான் எங்கு போனாலும் எங்கு வந்தாலும் வேளாவேளைக்கு வீடு வந்து உணவுண்பார் என்றும் அவரின் வாழ்வு உழைப்பவருக்குப பலன் உறுதி என்பதைக் காட்டுகிறது என்றும் தலைவர் திரு.கோ.சாரங்க பாணி உரைத்தார்.
தன் முயற்சியின் உருவாய் இருந்த அவரின் கைப்பட எழுதிய அவரின் வாழ்க்கை வரலாறு டிசம்பர் 15 ந் தேதியாகிய அவரின் பிறந்த நாளன்று வெளியிடப் படும் என்றும் கூறினார்.
திரு.அ.சி.சுப்பையா பொருளுதவியும், ஆலோசனை உதவியும் தந்த வாழ்ந்தவர் என்று அரின் அநுதாபக் கூட்டத்தில் பேசிய திரு.நா.கோ.வீரையா கூறினார்.
தெய்வத்தாலாகாதெனினும் முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் என்ற குறளின் இலக்கணமாய் திகழ்ந்தவர் அ.சி. சுப்பையா என்றும், அவரின் ஆத்ம சாந்திக்கு அவருடைய எண்ணங்களை நிறைவேற்ற அவரின் உறவினர்கள் முன்வந்து உழைக்க வேண்டும் என்றும் அடுத்துப் பேசிய ச.சா. சின்னப்பனார் கூறினார்.
நற்பணியாற்றிய சுயமரியாதைத் தமிழர் அ.சி. சுப்பையா என்று கூறிப் பாராட்டிய திரு. செ. நடராஜன், சுப்பையா தமிழர் சீர்திருத்தச் சங்கத்திற்குச் செய்த சேவைப் பற்றிப் பேசினார். அடுத்து திரு.அ. முருகையன் பேசினார்.
கீழ்வரும் தீர்மானம் தலைவர் அவர்களால் படிக்கப்பட்டு 2 நிமிட நேர மெளனத்திற்குப் பின் நிறைவேற்றப்பட்டது.
தமிழர் சீர்திருத்தச் சங்கம் நிறுவவும், நல்ல வகையில் உருவாகவும் உழைத்து அதன் நீண்ட காலத் தலைவராகவும் ஆலோசகராகவும் இருந்தும்,மலாயாத் தமிழர்கிடையே பல துறைகளில் சீர்திருத்தச் செம்மலாயிருந்தும், சீரிய பணியாற்றியவரும், எழுத்தாளரும், நூலாசிரியரும், அறிஞரும், சிங்கப்பூர் காந்தரசம் கம்பெனி உரிமையாளருமாகிய திரு.அ.சி. சுப்பையா அவர்கள் 14.10.55 வெள்ளிக்கிழமை யன்று காலமானது குறித்தும் அதற்கு 21 தினங்கள் முன்பாக அவர்களின் மனைவியார் திருமதி அஞ்சலை அம்மாள் அவர்கள் காலமானது குறித்தும் இக் கூட்டம் தன் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரின் பிரிவு தாளாமல் வருந்தும் உற்றார், உறவினர் ; நண்பர்கள் ஆகியோருக்கு இக் கூட்டம் தன் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மான நிறைவேற்றத்துக்குப் பின் தலைவர் தம் முடிவுரையில், இறந்தவரின் எண்ணங்களை இறக்க வேண்டியவர்களாகிய நாம் நல்ல வகையில் செயலாற் உருவாக்க வேண்டும் என்று கூறினார்.
த.சீ.சங்கக் கட்டிடம் புதுப்பிக்கப்பட திரு. சுப்பையா உறுதி கூறி, பிளானிலும் கண்ட்ராக்டிலும் கையயழுத்திட்டது பற்றியும் தலைவர் எடுத்துரைத்தார்.
இறுதியாக அநுதாபக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் பேசியவர் களுக்கும் முன்னின்றவர்களுக்கும் நன்றி கூறிய திரு. அ.சி. சுப்பையாவின் புதல்வர் திரு. எஸ்.வி. லிங்கம் கூறியதாவது:-
என் தந்தை தமிழர் சீர்திருத்தச் சங்கத்தைப் புதுப்பிக்க வாக்களித்தபடி இன்னும் 10000 வெள்ளி கொடு பட இருக்கிறது. அதனைத் தமது இதர உறவினர்களும் ஒத்து வந்தால் தந்து நிறைவேற்றி வைப்பேன் என்று உறுதி சொன்னார்.
No comments:
Post a Comment