Sunday, December 26, 2010

கால் நூற்றாண்டுக்கு முன் நிகழ்ந்தது

கால் நூற்றாண்டுக்கு முன் நிகழ்ந்தது

1929 இல் பெரியார் இராமசாமி மலாயாவில் சுற்றுப் பயணம் செய்த விவரங்களை மலாயாப் பெரியார் அ.சி. சுப்பையா கூறுகிறார்....

மலாயாவில் முதன் முதலில் அகில மலாயாத் தமிழர் மகாநாடு ஒன்று கூட்ட வேண்டுமென்றும், அதற்குப் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களை வரவழைத்து மகாநாட்டை திறந்து வைக்கும்படி கேட்டுக் கொள்வதென்றும் நானும் சில சீர்திருத்த ஆர்வங்கொண்ட தோழர்களும் தீர்மானித்தோம். அதன்படியே பெரியாருக்குக் கடிதம் எழுதிக் கேட்டிருந்தோம். அதற்கு அவரும் தம் மனைவி யாருடனும் நாலைந்து தோழர்களுடனும் வருவதாக எழுதியிருந்தார். அதன்படியே மகாநாட்டை ஈப்போ நகரத்தில் கூட்டுவதாகத் தீர்மானித்து அதற்காக வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டு முன்னேற்றம் பத்திரிகையிலும் பிரசரித்திருந்தோம்.

இதைக் கண்ணுற்ற கோலாலம்ப்பூர் தமிழ்நேசன் பத்திரிகையானது ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பெரிய நாஸ்திகரென்றும் அவர் மலாயாவிற்கு வந்தால் பொது ஜனங்களுக்குள் கிளர்ச்சியும் கலவரமும் ஏற்பட்டு விடுமென்றும், ஆதலால் பினாங்கில் அவரை இறங்கவிடாதபடி அப்படியே திருப்பி அனுப்பி விடவேண்டுமென்றும் எழுதியது. அதோடு மட்டும் நில்லாமல் பினாங்கிலிருந்து சில வைதீகப் பத்திரிகைகளும் தமிழ் நேசனைப் பின்பற்றி எழுதியதிலிருந்து சில பிற்போக்காளர்களும், துண்டு பிரசுரங்களடித்து பினாங்கு நகர முழுவதும் பரவச் செய்து விட்டார்கள். இதைக் கேள்வியுற்ற எனக்கு மிகுந்த ஆத்திரமும் கவலையும் மூண்டு விட்டது. உடனே எனது தோழர்களாகிய திரு. கோ.சாரங்கபாணி, காலஞ்சென்ற கா. தாமோதரனார், திரு.கோ. இராமலிங்கம் ஆகிய நாங்கள் நால்வரும் கூடி ஆலோசனை செய்து எப்படியாவது நாம் அவர்களைக் கப்பலைவிட்டு இறக்கிக் கொண்டு வந்து விட வேண்டுமென்று முடிவு செய்தோம். அதன்படி மறுநாள் காலையில், நாலு மணிக்கெல்லாம் கிட்டா கப்பலிலேறி பினாங்கு போய்ச் சேர்ந்தோம்.

அங்கு போய்ச் சேர்ந்தவுடன் எங்களுக்கு பழக்கமான சுவாமி அற்புதாநந்தா அவர்களைச் சந்தித்து அவர் மூலமாக இந்தியா ஏஜண்டு ஜனாப் எஸ்.கெச். அப்துல் காதர் சி.பி.இ. அவர்களின் உதவியால் பினாங்கு கரையிறங்காமல் வைத்திருந்தவர்களையயல்லாம் உடனடியாக இறக்கிவிடும் படி போலிஸ் கமி­னருக்கு அறிவிக்கவும், அவர்களும் உடனே இறக்கிவிடும்படி கப்பல திகாரிகளுக்கு அறிவிக்கவும் அவர்களும் அதன்படி 20.12.29 காலை 10 மணிக்கெல்லாம் எல்லோரும் கப்பலை விட்டு கரைக்கு இறங்கி வந்தார்கள்.
பெரியாருடன் வந்தவர்கள் அவர் மனைவி திருமதி நாகம்மையார், திருவாளர்கள் எஸ்.இராமநாதன், அ.பொன்னம்பலனார், சாமி சிதம்பரனார், சி. நடராஜன், சொக்கலிங்கம், என்.பி.காளியப்பன் முதலியோர்கள் வந்திறங்கினார்கள். அவ்வமயம் பினாங்கு துறைமுகத்தில் 5000 மக்களுக்கு மேல் கூடிவிட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் பெரியாரை கரையிறங்க விடாமல் திருப்பி அனுப்பிவிடும்படி எதிரிகள் செய்த பிரசாரம்தான் என்று பொது மக்களிடையே என்றுமில்லாத ஓர் உணர்ச்சியை உண்டாக்கி விட்டது.
அதன்பிறகு அன்று மாலையே அதை விட்டுப் புறப்பட்டு, கோலப்பிறை, கோலக்கங்சார் முதலிய ஊர்களுக்குச் சென்று விட்டு 23.12.29 இல் ஈப்போ வந்து சேர்ந்தோம். அங்கேதான் தமிழர் மகாநாடு நடந்தது. அந்த மகாநாட்டுக்கு ஜனாப் டாக்டர் முகம்மது கெளஸ் ஜே.பி. அவர்கள் தலைமை தாங்கினார். திரு. ஆர்.ப. கிருஷ்ணன், மகா நாட்டுக் கொடியை ஏற்றுவித்தார். நான் மாட்சிமை தாங்கிய மன்னர்பிரான், ராணியாரின் படங்களைத் திறந்து வைத்தேன். பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் மகாநாட்டைத் திறந்து வைத்தார். மகாநாட்டு நிகழ்ச்சிகளெல்லாம் முடிந்தவுடன் அங்கு இரண்டொரு நாள் தங்கியிருந்து அதன் பிறகு பினாங்கு, கோலாலம்பூர், தைப்பிங், மூவார், ஜோகூர், பத்துபகாட், மலாக்கா, தம்பின், கோலப்பிறை, கோலாகுப்பு, தஞ்சோங் மாலிம், சுங்கை குருட், தெலுக்கான்சன், கம்பார், கோலக்கங்சார் சுங்கைப்பட்டாணி முதலிய ஊர்களெல்லாம் சுற்றிக் கொண்டு ஆங்காங்கு நடந்த வரவேற்புக் கூட்டங்களுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் சமூகமளித்து விட்டு கடைசியாய் பெரியாரும் நாங்களும் சிங்கப்பூர் வந்து சேர்ந்தோம்.

பெரியார் வருவதைத் தெரிந்த கொண்ட பொது மக்கள் தேங் ரோட் ரயில்வே ஸ்டேசனில் ஏராளமாகக் கூடி விட்டார்கள். பெரியார் வரவேற்புக் கமிட்டிக்கு தலைவராக இருக்கும்படி திரு. உ. இராமசாமி நாடார் ஜே.பி. அவர்களைக் கேட்டுக் கொண்டதற்கு முதலில் அவரும் சரி யயன்று ஒப்புக்கொண்டார். கடைசியில் பினாங்கு நாடார் மகாஜன சங்கத்தார், நாடாரை வரவேற்புக் கமிட்டியில் கலந்து கொள்ள வேண்டாமென்று அவருக்கு கடிதம் எழுதினார்கள். அதை முன்னிட்டு அவரும் மறுத்தார். ஆனால், ஈப்போ முதலிய சுற்றுப்பட்ட ஊர்களில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிகளையும், அகில மலாயா தமிழர் மகாநாட்டின் திறப்புவிழா வைபவத்தைப் பற்றியும் பத்திரிகையில் பார்த்த பிறகுதான நாடாருக்கும் மனமாற்றம் ஏற்பட்டு, தேங் ரோட் ரயில்வே ஸ்டே­னில், பெரியாரை வரவேற்பதற்காக வேண்டி புதிதாக ஒரு பெரிய கார் ஒன்று வாங்கிக் கொண்டு வந்து பெரியாருக்கும் நாகம்மையாருக்கும் மாலை சூட்டி எல்லோரையும் காரில் அழைத்துக் கொண்டு வந்து அவர் வீட்டில் இறக்கினார்.

அதன் பிறகு பெரியார் சிங்கப்பூரை விட்டு தாய் நாடு போகிற வரையில் தஞ்சோங் காத்தோனில் உள்ள இராமசாமி நாடாரின் பங்களாவில் தான் தங்கியிருந்தார்கள். தங்கியிருந்தது மட்டுமல்லாமல் அவர்களுக் கெல்லாம் சாப்பாடு முதலிய சகல வசதிகளையும் செய்து கொடுத்திருந்தார். அதன் பிறகு இச் சிங்கையில் பல விடங்களிலும் பொதுக்கூட்டங்களும் வரவேற்புகளும் பல சங்கங்களின் சார்பாகவும் பொது மக்களின் சார்பாகவும் நடந்தேறின. அதில் நானும் அகம்படியார் மகாஜன சங்கத்தின் சார்பாக நியூ வோர்ல்ட் தியேட்டரில் திரு.ஐ.ஐ. முதலியார் நாகலிங்கம் ஜே.பி. அவர்களின் தலைமையில் ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுத்தேன். அதன்பிறகு பெரியாரும் பெரியாருடன் வந்திருந்தவர்களும் நானும் தோழர்களாகிய கோ. சாரங்கபாணி உ. இராமசாமி நாடார், கோ. இராமலிங்கம், வே.நாரயணன் ஆர்.டி. கோவிந்தசாமி நாயுடு முதலியவர்களுடன் இருந்து ஒரு குருப் போட்டோ எடுத்துக் கொண்டு பெரியாரை 16.1.30-ல் தாய்நாட்டுக்கு அனுப்பி வைத்தோம்.

No comments:

Post a Comment